எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது மாநாடு, செயற்குழுவில் பேசினால் போதுமா? விஜய் குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
மதுரை: மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: திருமாவளவன், தலித் மக்களை பொதுத்தொகுதியில் நிறுத்திய ஜெயலலிதாவை பற்றியெல்லாம் பேசி வருகிறார். தன் பாணியை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். புதிதாக வந்த கட்சியின் (தவெக) 2வது மாநாடு நடக்க இருக்கிறது. விஜய் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்வது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. விஜய் களத்திற்கு வர வேண்டும். எல்லோரும் களத்திற்கு வந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கேயோ நடக்கும் மாநாடு, செயற்குழுவில் பேசி கடைசி நேரத்தில் தன் இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் வெளியில் வந்தால் இடையூறு ஏற்படும் என திரும்ப திரும்ப சொன்னால் எப்படி? விஜய் வெளியில் வந்து மக்களை சந்திக்க வேண்டும். எல்லாரும் எம்ஜிஆராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எம்ஜிஆராக எல்லோரும் ஆக முடியாது. தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு எம்ஜிஆர்தான். இவ்வாறு தெரிவித்தார்.