பிறந்த நாளையொட்டி வீச்சரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட கண்டக்டர் கைது: அரிவாள் கொடுத்த நண்பரும் சிக்கினார்
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு வள்ளுவர் சிலை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பார்த்தசாரதி (23). மினி பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். பார்த்தசாரதிக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி இவர் தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பட்டாக்கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் இருப்பது போன்ற போட்டோக்களை ரீல்ஸ்சாக வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த திருவாரூர் எஸ்பி கருண் கரட் உத்தரவின்படி முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதி, அவருக்கு வீச்சரிவாள் கொடுத்த முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காட்டை சேர்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன் (22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.