மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாக புகார்; ஜாய் கிரிசில்டாவிடம் துணை கமிஷனர் விசாரணை!
சென்னை: தன்னை திருமணம் செய்து நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் மீது இன்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவிடம் பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்தி வருகிறார். புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டுருந்தார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையரகத்திலும் புகார் அளித்தார். மேலும், பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து வருகிறார்.
அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (இன்று) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.
துணை கமிஷனர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்வி பட்டியலை வைத்து வனிதா விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஏஐ தொழில் நுட்பம் இருப்பதால் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.