அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர்கள் அடுத்தடுத்து மரணம்; தேர்தல் கமிஷன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்: எதிர்கட்சிகளும் கடும் கண்டனம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியின்போது ஏற்பட்ட கடுமையான பணிச்சுமை காரணமாக தேர்தல் பணியாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், கடுமையான பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகளின் மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குஜராத், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணிச்சுமை தாங்காமல் பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் ஏற்கெனவே அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹிதேந்திர காந்தி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தேர்தல் ஆணையத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே ஊழியர்களின் தொடர் மரணங்களுக்குக் காரணம்; இது மனித உரிமை மீறலாகும். மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் குறித்துச் சுதந்திரமான தணிக்கை செய்ய வேண்டும்’ என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தினமும் 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை முடிக்காவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உயர் அதிகாரிகள் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், பலர் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட சிலர் தங்கள் கடிதத்தில், ‘தேர்தல் ஆணையத்தின் பணிச்சுமையே என் முடிவுக்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முறையற்ற திட்டமிடலே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் மேற்கு வங்கத்தில் இந்தத் தீவிர ஆவணச் சரிபார்ப்பு நடவடிக்கையால் குடியுரிமைப் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தேவையற்ற அச்சம் மக்களிடையே பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.