போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ‘சொந்த உதவியாளர்’ முறை நீக்கம்: விதிகளை கடுமையாக்கியது ஒன்றிய அரசு
புதுடெல்லி: ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வெழுத உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சொந்த உதவியாளர் முறை படிப்படியாக நீக்கப்பட உள்ளது.
யுபிஎஸ்சி, ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகள் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுத சொந்த உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சொல்லாத பதில்களை உதவியாளர்கள் சொந்தமாக எழுதுவதாகவும், தேர்வில் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியதாகவும் பல்வேறு தேர்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் தேசிய தேர்வு நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 2 ஆண்டுகளுக்குள் பயிற்சி பெற்ற மற்றும் மேற்பார்வையிடப்பட்ட உதவியாளர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளி தேர்வகள் தங்கள் சொந்த உதவியாளர்களை அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அவர்களாகவே தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதவியார்களின் தகுதியும் கடுமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வுக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியை விட 2 முதல் 3 கல்வி ஆண்டுகள் குறைவாக இருக்க வேண்டும். ஒரே தேர்வுக்கு உதவியாளர்களாக இருக்க முடியாது என்பது உள்ளிட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.