கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை: மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்
சென்னை: "கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். தொண்டர்களை அமைதிப்படுத்த முடியாமல், புத்தி தடுமாற்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மீது பாய்ந்து வருகிறார் எடப்பாடி" என கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை. அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட , பொறுப்பிகளை வைத்திருக்க கூடியவர் கவனமாக பேச பேண்டும். எடப்பாடி மெகா கூட்டணி அமைக்கப்போவதாக ஆரவாரமாக முழங்கினார். அது நடைபெறாத காரணத்தினால் விரக்தியில் விழுந்திருக்கிறார்.
துரோகத்தின் அடையாளமாக நடமாடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாதவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். இனி எப்போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பாஜகவுடன் வைத்திருந்த கூட்டணி குறித்து தெரிவித்திருந்தார்.
அவர் வாழும் வரை அவரின் உறுதிமொழியை காப்பாற்றினார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தவர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார். அந்த கட்சியை சிதறு தேங்காயாய் உடைத்து நொறுக்கி தெருவில் எறிந்துவிட்டு கம்யூனிஸ்ட்டுகள் பற்றி பேச எந்த தகுதியில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.