கம்யூனிஸ்ட்கள் பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: முத்தரசன் எச்சரிக்கை
சென்னை: கம்யூனிஸ்ட்கள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தகுதியுமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட்கள் குறித்து தரம் தாழ்ந்த முறையில் அவதூறாக பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தவர்களுக்கு துரோகம் செய்து, அந்த கட்சியை சிதறு தேங்காயாக உடைத்து, நொறுக்கி தெருவில் எறிந்து விட்டு, கம்யூனிஸ்ட்கள் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை எதிர்த்து நடந்த முற்றுகை போராட்டம், தொடங்கி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வரும் முறைகேடுகள் வரை நூற்றுக்கணக்கான பெரும் போராட்டங்களில், பல்லாயிரம் பேர் கலந்து கொண்டபோது, அவர், தூக்கத்தில் இருந்தாரா என்ற வினா எழுகிறது.
கம்யூனிஸ்ட்கள் கட்டெறுப்பாகி விட்டதாக சிறுமைப்படுத்தி வரும் எடப்பாடியின் துரோக செயலை தோலுரித்து தோரணம் கட்டும்போது, அதன் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும். வகுப்புவாத, மதவெறி, சாதி வெறி சக்திகளுக்கு தங்க தாம்பாளம் ஏந்தி நிற்கும் எடப்பாடி பழனிசாமி வகித்து வரும் பொறுப்புக்கு தக்கபடி, பேச கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கிறது.