இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன். இவர் 2015ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை அப்பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலத்தில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்களை விவாதித்து வருகின்றனர்.
குறிப்பாக முத்தரசன் 75 வயதை எட்டியதாலும், மூன்று முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டதாலும், கட்சி விதிகளின்படி அவர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பல்வேறு அரசியல் சிக்கல் காலகட்டத்தில் சரியான முடிவு எடுத்து கட்சியை நடத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை சரியாக வளர்த்து வருவதால் அவருக்கு பொறுப்பு நீட்டிக்கப்படலாம் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை முத்தரசன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும், அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு, கட்சியின் தேசிய தலைமை அவரையே அப்பொறுப்பில் தொடரச் செய்யவும் வாய்ப்பிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.