சோளிங்கர் பஸ் நிலையத்தில் பரபரப்பு 6 மாத குழந்தையை மூதாட்டியிடம் கொடுத்து விட்டு இளம்பெண் ஓட்டம்
*போலீசார் விசாரணை
சோளிங்கர் : சோளிங்கர் பஸ் நிலையத்தில் 6 மாத ஆண் குழந்தையை அங்கு கடை வைத்திருக்கும் மூதாட்டியிடம் கொடுத்து விட்டு காணாமல்போன இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கையில் 6 மாத ஆண் குழந்தையுடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
பின்னர், அந்த இளம்பெண் பஸ் நிலையத்தில் சாலையோரம் கடை வைத்திருக்கும் மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து விட்டு 5 நிமிடம் பார்த்து கொள்ளுங்கள், நான் கழிவறைக்கு சென்று விட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுள்ளார்.
ஆனால், அந்த இளம்பெண் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் செய்வதறியாது மூதாட்டி தவித்தார். அங்கிருந்த மக்கள் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது மூதாட்டி, அந்த குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து நடந்ததை விளக்கமாக கூறினார்.
இதையடுத்து, போலீசார் குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலர்கள் அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.
மேலும், போலீசார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த இளம்பெண் குழந்தையை விட்டுச்சென்றது ஏன்? குழந்தை அவருடையது தானா? அல்லது வேறு யாருடையதா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சோளிங்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.