கருத்து கந்தசாமிபோல் பேசுகிறார் நம்பி வந்தவர்களை அனாதையாக்கியவர் டிடிவி: எடப்பாடி மீதான விமர்சனத்துக்கு உதயகுமார் பதிலடி
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது: சுயநலத்தில் டிடிவி.தினகரனின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் தனது தொண்டர்களின், மக்களின் நம்பிக்கையை இழந்து, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தனிநபர் தெரிவிக்கும் கருத்தை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை.
சுயநலத்தின் மொத்த உருவமாக தஞ்சையில் கருத்து கந்தசாமியாக அவர் கருத்து கூறியுள்ளார்.உங்களை புரிந்து கொண்டவர்கள் விலகிச் சென்றார்கள். தற்போதும் விலகி செல்கிறார்கள். புரியாதவர்கள் புரிந்து இனிமேல் காலம் தாழ்த்தாமல் அவரை விட்டு விலகிச் செல்ல வேண்டும். அவரை நம்பியவர்களெல்லாம் வழி அனுப்பி வைக்கப்பட்டனர். தஞ்சையில் கருத்து கந்தசாமியாக, கண்ணை மூடிக்கொண்டு பேசிய நபருக்கு சில கேள்விகளை வைக்கிறேன்.
உங்களை நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள். உங்களை நம்பி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டார்கள். அவர்களை அரசியல் அனாதையாக்கிவிட்டீர்கள். அவர்களின் எதிர்காலம் என்ன? பதில் சொல்லுங்கள். இன்னும் பலர் உங்களைவிட்டு எப்போது ஓடலாம் என்று சுபமுகூர்த்தம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பல பேரை அரசியல் அனாதையாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு. இவ்வாறு பேசியுள்ளார்.
* ‘உள்குத்து கண்ணுக்கு தெரியாது’
மதுரை மாவட்டம், சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று கூறுகையில், ‘‘ஒருபுறம் ஆளும்கட்சியை எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அது வெளிக்குத்து. இன்னொரு புறம் நம்முடன் இருந்தவர்களிடமிருந்து இயக்கத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. அது உள்குத்து. வெளிக்குத்தை பார்த்துவிடலாம் என்றால், உள்குத்து கண்ணுக்கு தெரியாது.
அதிமுகவை வசை பாடுவதற்கு டிடிவி.தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆளுமையின் தோல்வி, இயலாமை போன்றவற்றால் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுள்ள டிடிவி, எதை பேசுகிறோம், எதை தின்றோம், எதை மெல்கிறோம் என்பது தெரியாமல் தனது இருப்பை உறுதி செய்யவே, தினந்தோறும் ஊடகங்கள் மத்தியில் ஏதேனும் ஒரு கருத்தை விதைத்து, விஷத்தை தூவிவிட்டு செல்கிறார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மாமனிதர் அவர்’’ எனத் தெரிவித்தார்.