உச்ச கட்ட பரபரப்பில் மெச்சத்தக்க ஆட்டம்: துல்லிய பந்துகளால் 5 விக்கெட் அள்ளிய சிராஜ்; ஓவல் அரங்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை
லண்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம், கடைசி நிமிடம் வரை உச்சக் கட்ட பரபரப்புடன் அரங்கேறியது. வெற்றியின் விளிம்பு வரை சென்ற இங்கிலாந்து வீரர்களின் கொட்டம் அடக்கி இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியது. இந்தியா - இங்கிலாந்து இடையில் ஏற்கனவே முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 2ல் வென்று இங்கிலாந்து முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து கடைசி போட்டி, லண்டன் ஓவல் அரங்கில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியாவின் ஸ்கோர், துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (118 ரன்) அட்டகாச ஆட்டத்தால் கணிசமாக உயர்ந்தது. ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் கடைசி நேரத்தில் அரை சதங்களை விளாசியதால், இந்தியா 396 ரன் எடுக்க, 373 ரன் முன்னிலை பெற்றது. அதையடுத்து, 374 ரன் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் முதல் 3 விக்கெட்டுகள் 106 ரன்னுக்குள் வீழ்ந்ததால் இந்தியாவுக்கு நம்பிக்கை துளிர்த்தது.
ஆனால், ஹேரி புரூக் (111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) இணை அடுத்தடுத்து சதங்களை விளாசி இந்திய ரசிகர்களின் இதயங்களை காயப்படுத்தினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், கடைசி நாளான நேற்று ஆட்டத்தை துவக்கிய ஜேமி ஸ்மித் (2 ரன்), ஜேமி ஓவர்டன் (9 ரன்), சிராஜ் பந்துகளில் வீழ்ந்தனர். அதனால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு நொறுங்கத் துவங்கியது. இருப்பினும் வெற்றிக்கு 20 ரன்களே இருந்ததால் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் காணப்பட்டது. அந்த சமயத்தில், பிரசித் கிருஷ்ணாவின் பந்தில், 9வது விக்கெட்டாக ஜோஷ் டங் ரன் எடுக்காமல் கிளீன் போல்டானார். கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸ் வந்தார்.
அதன் பின், வெற்றிக்கு 6 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சிராஜ் துல்லியமாக வீசிய மந்திரப் பந்தில் அட்கின்சன் (17 ரன்) ஆட்டமிழந்தார். அதனால், 367 ரன்னுடன் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிய, 6 ரன் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றியை பெற்ற இந்தியா, ஓவல் அரங்கு வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரை, 2-2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு அச்சாணியாக திகழ்ந்த சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரில், 754 ரன் குவித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், 481 ரன் எடுத்த ஹேரி புரூக் தொடர் நாயகர்களாக அறிவிக்கப்பட்டனர்.