நிறங்களால் நினைவுகளை பதிவு செய்யலாம்!
டைரி எழுதும் பழக்கங்களும், எழுத்து மீதான ஆர்வமும், குறிப்பாக புத்தகங்கள் மீதான ஆர்வமும் குறைந்து இன்றைய தலைமுறை 30 வினாடி வீடியோக்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இதனை மையமாக வைத்து புத்தகங்கள் மற்றும் எழுத்து மீதான ஆர்வத்தை உருவாக்கும்படி ஃபேப்ரிக் அல்லது துணிகளில் உருவாக்கப்படும் கைவினை நோட்டு புத்தகங்களை உருவாக்கி வருகிறார் சென்னையை சேர்ந்த திவ்யா. வண்ணமயமான இவர் உருவாக்கிய நோட்டுப் புத்தகங்களை பார்த்தால் நமக்கே எழுதவேண்டும் என தோன்றும். அதுதான் தன்னுடைய வெற்றி என்கிறார் திவ்யா.
‘‘எங்களுக்கு குடும்ப பூர்வீகம் ஆந்திரா, ஆனால் நான் பிறந்தது சென்னை வளர்ந்தது ஆந்திரா. படிப்பு சென்னையில்தான். எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பில் பேச்சிலர் டிகிரி முடிச்சேன். எம்பிஏ முடிச்சிட்டு ஹெச். ஆர் ஆக ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்யறேன். இதற்கிடையில் எனக்கு டைரி எழுதணும் என்கிற ஆர்வத்தில் நிறைய கடைகளில் இறங்கி கேட்டேன். ஆனால் எங்கும் நான் எதிர்பார்க்கிற மாதிரி கலர்ஃபுல்லான அல்லது க்யூட்டான டைரிகள் அல்லது நோட்டு புத்தகங்கள் கிடைக்கலை. ஒண்ணு டைரியாக இருக்கு, அல்லது சாதாரண நோட்டுகளா இருக்கு. எனக்கு டைரி மாதிரியும் வேண்டாம், சாதாரண நோட்டு புத்தகங்களாகவும் வேண்டாம், கொஞ்சம் கலர்ஃபுல்லா, அதேசமயம் சூழலுக்கு தீங்கு இல்லாத காகிதங்களாக இருக்கணும் அப்படின்னு முடிவு செய்துதான் இந்த பேப்ரிக் அல்லது துணிகளால் உருவாக்கப்பட்ட ஜர்னல்களை டிசைன் செய்ய ஆரம்பித்தேன். இப்போ எனக்கு ஏகப்பட்ட கஸ்டமர்கள். 60- 70 வயசில் கூட இப்போ நான் ஜர்னல்ஸ் எழுதறேன், உன்னுடைய ஹேண்ட் மேட் நோட்புக்ஸ் என்னை திரும்ப எழுத வைக்குது அப்படின்னு சந்தோசமா சொல்லிட்டு வாங்கிட்டு போனாங்க. ஆறு வயதிலிருந்து அறுபது வயது வரை எல்லாவயது மக்களுக்கும் என்கிட்ட ஜர்னல்ஸ் இருக்கு” என்ற திவ்யா இந்த பேப்ரிக் டைரிகளை உருவாக்கும் விதம் குறித்து மேலும் பகிர்ந்து கொண்டார்.
‘‘புத்தகத்தை தொட்டு படித்து அதில் எழுதுறபோது வருகிற சந்தோஷம் இப்போ இருக்கிற டிஜிட்டல் உலகத்துக்கு புரியாது. நான் ரொம்ப நாளைக்கு இந்த டிஜிட்டல் திரை நம்ம கண்களுக்கு நல்லது செய்யாது. ஆனால் புத்தகங்கள் வேறு, நாமே கைப்பட எழுதும் பொழுது அதில் உணர்வுகளும், அறிவும் கற்பனை திறனும் அதிகரிக்கும். அந்த உணர்வுகளையும் எழுத்து மீதான ஆர்வத்தையும் இப்போ இருக்கிற தலைமுறைக்கு கொடுக்க நினைச்சேன். அப்படி ஒரு நோட் புக்கை தான் என்னுடைய நண்பன் எனக்கு கிப்ட்டா கொடுத்தார். அதிலிருந்து தான் இந்த ஐடியா தோணுச்சு. அது வெறும் கார்ட் போர்டு. ஆனால் நான் துணிகளில், கலர்ஃபுல்லான டிசைன் செய்து அதை அட்டையாக வச்சு இந்த ஜர்னல்ஸ் நோட்புக்குகளை உருவாக்க நினைச்சேன். அதில் இருக்கும் பேப்பர்கள் கூட ஆர்கானிக் பேப்பர்கள்தான். அதாவது சீக்கிரம் மக்கக் கூடிய நிலைத்தன்மை ( sustainable)கொண்ட பேப்பர். இன்னைக்கு இருக்கிற மக்கள் எந்த நல்ல பழக்கத்தை கத்துக்க ஏதோ ஒரு வித்தியாசமான முயற்சி தேவைப்படுது. அப்படிதான் இந்த புத்தகம் படிக்கிற பழக்கமும் எழுதும் பழக்கமும். எப்படி தமிழ் கதைகளையும் நாவல்களையும் படிக்க பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு திரைப்படம் தேவைப்பட்டுச்சோ, அந்த மாதிரி மக்களை எழுத வைக்கவும், குறிப்பா இளம் தலைமுறைக்கு எழுத்து மிதமான ஆர்வம் உண்டாக்க இப்படியான கலர்ஃபுல் முயற்சிகள் தேவைப்படுது. எழுத்தும் மொழி மீதான ஆர்வமும் குறைந்த காரணம் தான் உணர்வுகளும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. முக்கியமா குழந்தைகள் மொபைல் பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. அவங்களை புத்தகங்கள் பக்கம் திருப்பியாக வேண்டிய கட்டாயம் இருக்கு. அதற்கு இந்த மாதிரியான கலர்ஃபுல் நோட்புக்குகள் நிச்சயம் பயன்படும் அப்படின்னு நம்புறேன்” என்று திவ்யா இந்த நோட்புக்குகளை கார்ப்பரேட் கிப்ட் ஹம்பர்கள் ஆகவும் கொடுக்கிறார்.
‘‘பண்டிகை காலங்களில் ஏதேதோ அன்பளிப்பை கொடுக்குறதுக்கு பதிலா இப்படியான நோட்டு புக்குகள் அல்லது ஜர்னல்ஸ்களை கொடுத்து எழுதும் ஆர்வத்தை தூண்டலாம். என்கிட்டயே நிறைய ஐடி கம்பெனிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கிப்ட் ஹம்பர்சா இந்த நோட்புக்குகளை வாங்குறாங்க. இதை அடுத்து இன்னும் மொபைல் காண்டாக்ட் குட்டி டைரி, குறிப்பேடுகள், இப்படி எல்லா விதமாகவும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். தற்சமயம் இன்ஸ்டாகிராம், சோசியல் மீடியாக்கள், எக்ஸ்போ என என்னுடைய நோட் புக்ஸ் விரும்பி வாங்கறாங்க. எல்லாமே மல், மல் காட்டன் , லினன், உள்ளிட்ட ஆர்கானிக் ஃபேப்ரிக் தான் பயன்படுத்தறேன். மேலும் பென்சில் முதல் பெயின்டிங் வரை எப்படியும் இதில் பயன்படுத்தலாம். காலண்டர், ஸ்லம் புத்தகங்கள் கேட்கறாங்க. ஆனால் எதையும் ஒரு லிமிட்டுகுள்ள அடக்கி, அதற்கான ஆடியன்சை இழக்க விரும்பலை. மேலும் டைரி கான்செப்டில் கொடுத்தால் மறுபடியும் போரிங்காகவும் மேலும் அந்த வருஷத்துடன் அந்த டைரி முடிந்துவிடும் என்கிற எண்ணமும் வரும். என்னுடைய கிரியேட்டிவிட்டியை ஓரிரு மாதங்களுக்கு அப்படின்னு நான் எல்லை வகுக்க முடியாது. அதைப்போல ஒரு எல்லைக்குள் எழுதற பழக்கம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள அந்த பழக்கத்தை கைவிட்டிடுவாங்க. எந்தக் கோடுகளும் இல்லாமல் வெறும் காகிதமா கொடுக்கும் பொழுது தான் அவங்களுடைய உண்மையான உணர்வை பதிவு செய்வாங்க. ஒரு லிமிட் கொடுத்து அதற்குள் எழுத சொன்னா அவங்க கற்பனையும் அல்லது அவங்க உணர்வும் ஒரு எல்லைக்குள்ள நின்னுடும். அதனால் என்னுடைய நோட்புக்குகள் எந்த டிசைனும் அல்லது தேதிகளும் மாதங்களும் இல்லாமல் தான் வரும். அட்டைகள் மட்டும் கலர்ஃபுல்லான துணிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பண்டிகை காலங்களுக்கு கூட இந்த மாதிரி கிஃப்ட் குழந்தைகளை மொழி சார்ந்து திசை திருப்பும்.
- ஷாலினி நியூட்டன்