கொடைக்கானலில் வானில் தோன்றிய ‘வண்ணக் கலவை’: மக்கள், சுற்றுலாப்பயணிகள் வியப்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் வான் பரப்பில் தென்பட்ட வண்ண கலவை அதிசய நிகழ்வினை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வியந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்பம் சற்று அதிகமாக நிலவியது. மேலும் வானம் நீல நிறத்துடன், வெண் மேககூட்டங்களுடன் காட்சியளித்தது. அப்போது திடீரென மேகக்கூட்டங்கள் இடையே மழைக்கு பின் தோன்றும் வானவில் போல பல வண்ண கலவை தென்பட்டது.
சில நிமிடங்கள் மட்டும் தென்பட்ட இந்த வண்ண கலவை அதிசயத்தை பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை, பழம்புத்தூர் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு வியந்தனர். இதுகுறித்து வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது கூறுகையில், ‘‘இது மிகவும் அரிதான நிகழ்வு. சூரிய ஒளி கதிர்கள் மேகக்கூட்டங்கள் மீது படும் போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்’’ என்றனர்.