“தந்தை படுகொலைக்கு பழி தீர்த்தார்’’ 17 ஆண்டுகள் காத்திருந்து ரவுடியை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவர்: டி.பி.சத்திரம் சம்பவத்தில் திருப்பம்
அண்ணாநகர்: சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பிரச்னையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்துள்ளார். மேலும் அதிமுக நிர்வாகியாக இருந்துகொண்டு திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழில் செய்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ராஜ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது பைக்குகளில் வந்த 10 பேரில் பட்டாகத்தியுடன் 5 பேர் வீட்டுக்குள் புகுந்து ராஜ்குமாரை சுற்றிவளைத்து வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது விரட்டிச்சென்று வெட்டியதில் ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் டிபி.சத்திரம் போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் கிருஷ்ணவேணியின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் செந்திலை கடந்த 2008ம் ஆண்டு கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகளில் தொடர்புடையவர். பிரபல ரவுடி தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும்பைனான்சியர் ஆறுமுகம், பிரான்சிஸ், குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகியோர் செந்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இதில் தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும் பைனான்சியர் ஆறுமுகம் ஆகியோர் பல பிரச்னைகளில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இதில் பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். செந்தில் கொலை வழக்கில் தொடர்புடைய குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. செந்தில் மகன் கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்துள்ளார். இதற்காக தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் வெளியாட்கள் என 10 பேருடன் சென்று ரவுடி ராஜ்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக செந்திலின் மகன் யுவனேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்தனர். இதுசம்பந்தமாக கல்லூரி மாணவர் இஸ்ரவேல், டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தலைமறைவாக உள்ள 7 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். செந்திலின் கொலைக்கு பழிக்குப்பழியாக ராஜ்குமார் கொல்லப்பட்டாரா, வெவ்வேறு காலகட்டங்களில் ராஜ்குமாரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேர்ந்து செந்தில் மகனை வைத்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.