அரைகுறை ஆடையுடன் புகுந்து கல்லூரி மாணவி தாய்க்கு மிரட்டல்: வீட்டு உரிமையாளர் கைது
பெரம்பூர்: வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கும் அவரது தாய்க்கும் மிரட்டல் விடுத்த உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 2வது தெருவில் வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்துவரும் 18 வயது பெண் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் கணேசன் (45) என்பவர் அடிக்கடி மதுபானம் அருந்திவிட்டுவந்து வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் குடிபோதையில் வந்த கணேசன், அரைகுறை ஆடையுடன் மாணவியின் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது கணேசன், ‘’உங்கள் வீட்டு நாய் குறைப்பதால் எனக்கு தூக்கம் வரவில்லை’ எனக் கூறி தகாதவார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதன்பின்னர் வீட்டில் உள்ள மின்மோட்டார் சுவிட்சை உடைத்துவிட்டு சென்று விட்டார்.
இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, கணேசனை கைது செய்தனர். மாணவி, அவரது தாய் ஆகியோருக்கு தொல்லை கொடுத்தது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். பின்னர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.