போதை மாத்திரையை கரைத்து ஊசிமூலம் ஏற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்: போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது
சென்னை: புழல் பகுதியில் ஒரு வீட்டுக்குள் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உள்பட 7 பேரை இன்று காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 380 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புழல் பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் உடல்நலம் பாதித்ததில், அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புழல் காவல் நிலையத்தில் நேற்று அந்த கல்லூரி மாணவர் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், தனது நண்பர் ஒருவர் போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் தனக்கு ஏற்றியதால் போதை தலைக்கேறியது. அடுத்தடுத்து எனக்கு போதை மாத்திரைகளை கரைத்து ஊசியில் நிரப்பி ஏற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், புழல் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் ஒரு வீட்டுக்குள் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்திருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு இன்று காலை போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு ஒரு வீட்டுக்குள் இருந்து பலர் போதை மாத்திரைகளை வாங்கி செல்வதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டுக்குள், அதிக போதை தரும் டைடால்-400 எனும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வீட்டுக்குள் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 7 பேரையும் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மேகநாதன், ஜாஸ்மின், விஜய், ரஹ்மத்துல்லா, கார்த்திக், ஸ்டீபன் கார்த்தி, மணிகண்டன் ஆகிய 7 பேர் எனத் தெரியவந்தது. இவர்கள் வடமாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை பெற்று, வீட்டுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஜாஸ்மின் உள்பட 7 பேரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 380 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.