கோவை கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு 14வது முறையாக இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது.
தற்போது 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் ரமேஷ் என்ற பெயரில் டார்க் நெட் பயன்படுத்தி இ-மெயில் அனுப்பி இருப்பது தெரியவந்தது. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியிலும் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வந்தது. கல்லூரியிலும் போலீஸ் சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. சைபர் கிரைம் போலீசார் மெயில் அனுப்பிய நபர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.