கலெக்டர், எஸ்பி ஆபீசை விட்டு வெளியே வர முடியாது: ராஜேந்திரபாலாஜி பகிரங்க மிரட்டல்
சிவகாசி: சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலெக்டர், எஸ்பிக்கு எச்சரிக்கை விடும்படி ராஜேந்திரபாலாஜி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பட்டாசு தொழிலுக்கு பல வகைகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டால் விபத்து வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது. போதை பொருளை விற்பனை செய்வது போல் பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள் பதற்றத்துடன் வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலை பாதுகாக்க நினைத்தால் அதிகாரிகளின் ஆய்வை முறைப்படுத்த வேண்டும்.
ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் செயல்பட்டால் 500 வாகனங்களில் சென்று மாவட்ட கலெக்டர், எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன். கலெக்டரும், எஸ்பியும் எங்களுக்கு பதில் சொல்லாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியாதபடி செய்வோம். உடம்பில் வியர்த்தால் கூட துண்டை வைத்து துடைக்க முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து தமிழகத்தின் நன்மைக்காக பல கோரிக்கைகளையும், பணி குறித்தும் பேசிவிட்டு திரும்பி வந்தபோது, தன் முகத்தை துடைத்ததை ஒரு பெரிய குற்றமாக்கியுள்ளனர். நாங்கள் என்ன தப்பான இடத்திற்கா சென்று வந்தோம்?. துண்டை வைத்து துடைத்தால் என்ன, துண்டை கழுத்தில் போட்டால் என்ன. துண்டை எடுத்து வெளியே போட்டால் உங்களுக்கு என்ன? இவ்வாறு அவர் கூறினார்.