தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.1,791 கோடியில் கோவையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது; தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலம்: 10.1 கி.மீ தூரத்தை 10 நிமிடத்தில் கடக்கலாம்

* தூங்கா நகரத்தை மிஞ்சிய மான்செஸ்டர் நகரம், மாநில நெடுஞ்சாலைத்துறை அசத்தலான வடிவமைப்பு

Advertisement

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் மக்கள்தொகை பெருக்கமும், வாகன பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, மக்கள்தொகை பெருக்கத்தைவிட வாகன பெருக்கம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், நகரில் வாகன போக்குவரத்துக்கு தேவையான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

சென்னைக்கு நுழைவாயிலாக ஜிஎஸ்டி மற்றும் மவுன்ட் ரோடு உள்ளது போல், கோவைக்கு அவினாசி சாலை. இங்கு கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டிய சூழல் எழுந்தது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், கடந்த 2020ம் ஆண்டு இதற்கான திட்டமிடல் துவங்கி, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. மொத்தம் 10.1 கி.மீ தூரத்திற்கு 17.25 மீட்டர் அகலத்தில், ரூ.1,621 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி துவங்கியது.

இந்த மேம்பாலத்திற்காக மொத்தம் 305 தாங்கு தூண்கள் (பில்லர்) அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடந்துவந்த நிலையில், இரும்புகம்பி, ஜல்லி, சிமென்ட், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையேற்றம் காரணமாக திட்ட மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, மதிப்பீடு ரூ.1,791 கோடியாக உயர்ந்தது. கோவை மாநகரின் மையப்பகுதியான உப்பிலிபாளையம் போக்குவரத்து சிக்னலில் இருந்து துவங்கி, பீளமேடு பகுதியை கடந்து, சின்னியம்பாளையம் கோல்டு வின்ஸ் பகுதியில் இப்பாலம் முடிவடையும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

அதிக வளைவு இன்றி, நேராக ‘எலிவேட்டர் காரிடர்’ என்ற முறையில் இந்த மேம்பாலம் மாநில நெடுஞ்சாலை துறையினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காலத்தில் சில மாதங்கள் கட்டுமான பணிகள் தடைபட்டது. நோய் பரவல் குறைந்த பின்னர் பணிகள் தீவிரமாக நடந்தது. அவினாசி சாலையில் வழக்கமாக காணப்படும் அதே போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், வாகன போக்குவரத்தை நிறுத்தாமல், மேம்பாலம் கட்டுமான பணிகள் இரவு, பகலாக நடந்தது.

இரு பில்லர்களுக்கு இடையே இணைக்கப்படும் பிரம்மாண்ட கான்கிரீட் காரிடர்கள், கோவையை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் தயாரிக்கப்பட்டது. அங்கிருந்து கிரேன் மூலமாக எடுத்து வரப்பட்டு, இரவுநேரத்தில், வாகன போக்குவரத்து குறைந்திருக்கும் சமயத்தில், ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. ஒவ்வொரு கான்கிரீட் காரிடர்களும் 30 மீட்டர் நீளம், 17.25 மீட்டர் அகலம் கொண்டவை. மொத்தம் 3,650 கான்கிரீட் காரிடர்கள் கிரேன் மூலம் நகருக்குள் கொண்டுவரப்பட்டு, இந்த பிரம்மாண்ட மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10.1 கி.மீ தூரம் கொண்ட இந்த மேம்பாலத்தில் விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் (விங்க்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் முழுமையாக நிறைவுபெறவில்லை. இவை, மேம்பாலத்தில் வாகனங்கள் பயணிக்க தடையாக இல்லாத வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.விங்க்ஸ் தவிர்த்து, பிரதான மேம்பால பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டது.

பரீட்சார்ந்த முறையில் இந்த மேம்பாலத்தில் நெடுஞ்சாலை துறையினர் வாகன இயக்க சோதனை நடத்தினர். அதிர்வுகள் எந்த அளவில் உள்ளது? பாதுகாப்பு அம்சம் எப்படி உள்ளது? என ஆராய்ந்தனர். இதில் எந்தவித தடங்களும் இல்லை என்பதால், வாகன போக்குவரத்துக்கு தயார் என சான்றளித்துள்ளனர். இந்த மேம்பாலத்தில், மழைக்காலத்தில், மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், பாலத்தின் அடிப்பகுதியில் பிவிசி குழாய் அமைத்து, இதன் வழியாக மழை நீர் முழுவதையும் சேகரித்து, மேம்பாலத்திற்கு இடையே தூண்கள் அருகேயுள்ள மண் பகுதியில் மழைநீர் கட்டமைப்பில் சேகரிக்கப்படுகிறது.

இப்படி, வழிநெடுக 120க்கும் மேற்பட்ட இடத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இரு காரிடர்கள் இணைக்கும் பகுதியில் வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, நவீன முறையில் உருவாக்கப்பட்ட ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது. இது, மழை, வெயில் காலங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல், மேம்பாலம் செக்மெண்ட் இடையே அதிர்வு மற்றும் சத்தத்தை குறைக்கிறது.

தரை தளத்தில் வாகனங்களில் செல்வதுபோல், இந்த மேம்பாலத்தின் மீது எவ்வித அசவுகரியம் இன்றி எளிதாக சென்று வர முடியும். தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை நத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 கி.மீ தூர மேம்பாலம்தான் தமிழகத்தில் மிக நீண்ட மேம்பாலம் என பெயர் பெற்றிருந்தது. தற்போது, இந்த மேம்பாலம் அந்த சாதனையை தகர்த்துள்ளது. தமிழகத்திலேயே மிக நீண்ட, வளைவுகள் அற்ற மேம்பாலம் என்ற பெருமையை, கோவை அவினாசி ரோடு மேம்பாலம் பெற்றுள்ளது.

இதற்கு பிறகு வேறு எந்த மாவட்டத்திலும் மிக நீண்ட மேம்பாலத்திற்கு டிசைன் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், கோவையின் புதிய அடையாளமாக இந்த மேம்பாலம் அமைந்துள்ளது. இதுதொடர்பாக கோவை கோட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி (திட்டம்) கூறியதாவது: அவினாசி ரோடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கிறது.

தற்போது, விபத்து தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் 60 கி.மீ வேகத்தில் சென்றால், மொத்த தூரத்தையும் 10 நிமிடத்தில் கடந்து விட முடியும். வழக்கமாக இந்த தூரத்தை கடக்க 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை ஆகும். இப்பாலத்தின் நடுவே வலுவான சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, நான்கு வழிப்பாதையாக இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் மோதிக்கொள்ளும் என்ற பயம் இன்றி மிக பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

பாலத்தின் மேல் பகுதியில், எந்த இடத்திலும் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பே இல்லை. மலைப்பகுதியில் உள்ளது போல், ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் சந்திப்பு பகுதியில் ‘ரோலர் கிராஸ் பேரியர்’ வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏறு தளத்தில் (விங்க்ஸ்) வாகனங்கள் ஏறி, பிரதான மேம்பாலத்திற்குள் நுழையும்போது, அவ்வழியாக வரும் வாகனங்களின் மீது மோதாமல் தவிர்க்க முடியும்.

இந்த மேம்பாலம் கட்டுவதற்கு, தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்துதலுக்காக ரூ.220 கோடி செலவிடப்பட்டுள்ளது. நவஇந்தியா பகுதியில் ரூ.14 கோடி செலவில் 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட உயர் மின்கோபுர கம்பங்கள் அகற்றப்பட்டு, தரைவழியில் புதைவட கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டுசெல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படும்போது அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அடியோடு குறையும். மக்கள் நிம்மதியாக பயணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9ம்தேதி (வியாழன்) இப்பாலத்தை திறந்துவைக்க உள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவைக்கு வந்து, செல்லும் வெளியூர் மக்கள் நிம்மதி அடைவார்கள்.

* போக்குவரத்து நெரிசல் இருக்காது

இந்த மேம்பாலத்தின் மீது சைக்கிள் முதல் கன்டெய்னர் லாரிகள் வரை அனைத்து ரக வாகனங்களும் பயணிக்க முடியும். பாதசாரிகள் மேம்பாலத்தை பயன்படுத்த முடியாது. பாலத்தின் மீது நடந்துசெல்ல அனுமதி கிடையாது. பாலத்தின் கீழ் பகுதியை பாதசாரிகள் பயன்படுத்தலாம். சர்வதேச தரத்துடன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தில், வேகத்தடை எதுவும் இல்லை. 80 கி.மீ வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும். கோவை மாநகரில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சென்னை, ஒசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும்.

* தொழில்வளம் பெருகும்

கோவை மாநகர பகுதிகளில் இருக்கும் சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், இனி வௌிப்பகுதிக்கு இடம்பெயர்ந்து, அந்த தொழில் நிறுவனங்களை இன்னும் பெரிய அளவில் மாற்றி அமைக்க இந்த மேம்பாலம் உதவும். இதன்

மூலம், வேலைவாய்ப்பு பெருகும். நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என தொழில் அமைப்பினர் கூறினர்.

* பசுமை வழித்தடம்

மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இருபுறமும் பக்கவாட்டு சுவர் கட்டி, நடுவில் செம்மண் கொட்டப்பட்டு, அதில், புல்வௌி உருவாக்கப்பட்டு, சிறு சிறு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இது, காண்பதற்கு பசுமையாக காட்சி அளிக்கிறது. செடி, கொடிகளுடன் அழுக்கடைந்து கிடந்த இடம் தற்போது பசுமை வழித்தடமாக மாறியுள்ளது.

* மேலும் 5 கி.மீ தூரம் நீட்டிப்பு

கோவை புறநகர் கிழக்குப்பகுதியான சின்னியம்பாளையத்தில் நிறைவடையும் இந்த மேம்பாலம், நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ தூரம் நீட்டிக்கப்பட உள்ளது. அதாவது, நீலாம்பூர்-மதுக்கரை பைபாஸ் சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. இதற்காக, கூடுதலாக ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த 5 கி.மீ தூரமும் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இதன் மொத்த நீளம் 15.1 கி.மீ தூரமாக அதிகரிக்கும்.

இந்த பெருமை, வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காமல், கோவைக்கே முழுமையாக வந்து சேரும். வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வருகை தரும் பெரும்பாலான வாகனங்கள், குறிப்பாக 80 சதவீத வாகனங்கள், அவினாசி ரோட்டை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, அடுத்த 20-25 ஆண்டிற்கு இங்கே போக்குவரத்து நெரிசல் என்ற பிரச்னைக்கே இடம் இருக்காது.

* விமான பயணிகளுக்கு நோ டென்ஷன்

வழக்கமாக, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து பீளமேடு விமான நிலையம் வரை காரில் செல்வதற்கு 30 முதல் 45 நிமிடம் வரை ஆகும். ஆனால், இனி அந்த தொந்தரவு இருக்காது. வெறும் 10 நிமிடத்தில் விமான நிலையத்தை சென்றடையலாம். இதன்மூலம், விமான பயணிகளுக்கு டென்ஷன் குறைந்துள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலுக்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.

* அதிக வளைவு இன்றி, நேராக ‘எலிவேட்டர் காரிடர்’ என்ற முறையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் (விங்க்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது.

* 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. கொரோனா நோய் பரவல் காலத்தில் சில மாதங்கள் கட்டுமான பணிகள் தடைப்பட்டது. நோய் பரவல் குறைந்த பின்னர் பணிகள் தீவிரமாக நடந்தது. 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

* இரு பில்லர்களுக்கு இடையே இணைக்கப்படும் பிரம்மாண்ட கான்கிரீட் காரிடர்கள், கோவையை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் தயாரிக்கப்பட்டது. அங்கிருந்து கிரேன் மூலமாக எடுத்து வரப்பட்டு, இரவுநேரத்தில், வாகன போக்குவரத்து குறைந்திருக்கும் சமயத்தில், ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன.

* இந்த மேம்பாலத்தில் 20க்கும் மேற்பட்ட இடத்தில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இரு காரிடர்கள் இணைக்கும் பகுதியில் வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, நவீன முறையில் உருவாக்கப்பட்ட ‘சைனஸ் பிளேட்’ பொருத்தப்பட்டுள்ளது.

* தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை நத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 கி.மீ தூர மேம்பாலம்தான் தமிழகத்தில் மிக நீண்ட மேம்பாலம் என பெயர் பெற்றிருந்தது. தற்போது, இந்த மேம்பாலம் அந்த சாதனையை தகர்த்துள்ளது.

* மெட்ரோ ரயிலுக்கு இடையூறின்றி கட்டமைப்பு

கோவை மாநகரில் அவினாசி ரோடு, சத்தி ரோடு இரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இப்பணியை துவக்குவதற்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தற்போது துவங்கியுள்ளது. அவினாசி ரோடு வழித்தடத்தில் மொத்தம் 20.4 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

அதாவது, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முதல் நீலாம்பூர் வரை இந்த மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. அப்படி மெட்ரோ ரயில் பாதை அமையும்போது, இந்த மேம்பாலத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில், மெட்ரோ ரயில் திட்டம் வந்தால், கோவை மாநகரம், வெளிநாட்டிற்கு இணையான தரத்தில் உயர்ந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement