கோவையில் இருந்து சேலம், சென்னை வழியாக காசி தமிழ் சங்கமத்திற்கு 2 சிறப்பு ரயில் இயக்கம்: டிக்கெட் முன்பதிவு துவங்கியது
சேலம்: கோவையில் இருந்து சேலம் வழியே காசி தமிழ் சங்கமத்திற்கு 2 சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கு நேற்று காலை டிக்கெட் முன்பதிவு துவங்கியது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஆண்டுதோறும் ஒன்றிய அரசு சார்பில் காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 4வது ஆண்டாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த காசி தமிழ் சங்கமம் விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து ஆன்மிகம், இலக்கியம், இசை, கலை மற்றும் பண்பாடு சார்ந்த வல்லுநர்கள், கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் செல்ல இருக்கின்றனர்.
இவர்கள், வாரணாசிக்கு செல்ல வசதியாக ரயில்வேத்துறை சார்பில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து காசி தமிழ் சங்கமத்திற்கு 7 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இவற்றில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து 2 காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன்படி, கோவை-பனாரஸ் சிறப்பு ரயில் (06005) வரும் டிசம்பர் 3ம் தேதி (புதன்கிழமை) இயக்கப்படுகிறது. கோவையில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், இட்டர்சி, ஜபல்பூர், மாணிக்பூர், பிரக்யாராஜ் வழியே பனாரசுக்கு 3வது நாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸ்-கோவை சிறப்பு ரயில் (06006) டிசம்பர் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படுகிறது.
இதேபோல், கோவை-பனாரஸ் சிறப்பு ரயில் (06013) வரும் டிசம்பர் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இயக்கப்படுகிறது. கோவையில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, பனாரசுக்கு 3வது நாள் (வியாழக்கிழமை) இரவு 11.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸ்-கோவை சிறப்பு ரயில் (06014) வரும் டிசம்பர் 15ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு வியாழன் காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (22ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்கியது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.