கோவை, நீலகிரியில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் தென் பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்தது. தஞ்சாவூர், கோவை, நீலகிரி, கடலூர், ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்தது.
இந்நிலையில், ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றோ அல்லது நாளையோ மேலும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நாளையும் நீடிக்கும். 30ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இயல்பைவிட அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். இன்று முதல் 28ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.