கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் 25, 26ம் தேதி சுற்றுப்பயணம்: செம்மொழிப்பூங்கா, ரூ.605 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்
சென்னை: கோவை, ஈரோடு மாவட்டங்களில் வரும் 25 மற்றும் 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு செம்மொழிப்பூங்கா மற்றும் ரூ.605 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கலைஞர் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். அந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் திறப்பு விழாவிக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், 25ம் தேதி காலை கோவை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். அன்று மாலையில் தொழில் துறை சார்பில் நடைபெறும் “டிஎன்- ரைஸ்” நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டபாலின் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் நாளான 26ம் தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, மாலை 5 மணியளவில் ஈரோடு சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், ரூ.50 லட்சம் செலவில் பால்வளத் தந்தை சி.கு.பரமசிவன் சிலையை நிறுவி, திறந்து வைக்கிறார். விழாவில், அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.