கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இந்த மாதத்தில் தொடர்ந்து 2வது முறையாக இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியை பார்த்தபோது அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் 2 நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
ஏற்கனவே, கடந்த 2ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இந்த மாதத்தில் 2வது முறையாக தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கோவை நீதிமன்றத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது. கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் என முக்கிய இடங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் போலீசார் மாநகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள அக்ரானி கடற்படை கணக்குப்பிரிவு அலுவலகத்துக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. கோவையில் தொடரும் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.