கோவை அருகே 2 சோதனைச்சாவடிகளில் சாணி எடுத்து செல்ல ரூ.1000 லஞ்சம்: 3 வன காவலர்கள் கைது
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் மாங்கரை மற்றும் ஆனைக்கட்டி ஆகிய இடங்களில் 2 வன சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் வன காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகார்கள் சென்றது. இதையடுத்து அந்த 2 சோதனைச்சாவடிகளிலும் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் மதுக்கரை அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவர் தனது தோட்டத்தில் இருந்து மாட்டுச் சாணத்தை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஆனைக்கட்டி அடுத்துள்ள அட்டப்பாடிக்கு சென்று கொண்டிருந்தார்.
மாங்கரை வனத்துறை சோதனைச்சாவடிக்கு அவர் வந்தபோது, அங்கு பணியில் இருந்த வனக்காவலர் செல்வகுமார் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் லாரியை நிறுத்தினார். தொடர்ந்து அந்த வழியாக மாட்டுச் சாணம் எடுத்துச் செல்ல ரூ.1000 லஞ்சமாக கேட்டு வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வனக்காவலர் செல்வக்குமாரை மடக்கி பிடித்தனர். இதேபோல் ஆனைக்கட்டி சோதனைச்சாவடிக்கு கிருஷ்ணமூர்த்தி சென்றபோது, அங்கு இருந்த வன காவலர் சதீஷ்குமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் லாரியை தடுத்து நிறுத்தி ரூ.1000 லஞ்சமாக வாங்கியுள்ளனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வனக்காவலர்கள் இருவரையும் பிடித்தனர். இவ்வாறு 3 வன காவலர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் சஸ்பெண்ட்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள ஏற்காடு வனச்சரக சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனக்காப்பாளர் ராம்குமார் என்பவர், ஒரு லாரி டிரைவரிடம் இருந்து பணம் பெறுவதை போன்ற வீடியோ வைரலானது. உரிய அனுமதியின்றி மர லோடு ஏற்றி வந்த அந்த லாரி டிரைவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, கீழே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில், ஏற்காடு வனக்காப்பாளர் ராம்குமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.