கோவை சூலூரில் 110 ஏக்கரில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா: திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர்
சென்னை: உலகில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், மின்சார வாகனங்கள், ஜி.பி.எஸ் உபகரணங்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பல சாதனங்களுக்கு செமி-கண்டக்டர் எனும் சிறு மின்சார பாகம் அவசியம். இந்தியாவில் வணிக ரீதியிலான செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலைகள் இல்லை என்பதால் பெரும்பாலும் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. செமி கண்டக்டர் இந்தியாவில் சண்டிகர் நகரில் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் செமி கண்டக்டர்கள் வடிவமைப்பு, தயாரிப்பு மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030 எனும் பெரும் திட்டத்தை இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. இதை 5 ஆண்டு திட்டமாக முன்னெடுக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கோவை சூலூர், பல்லடம் உள்ளடக்கிய பகுதியில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை செய்யும் நிறுவனங்களை தமிழகத்தில் ஊக்குவிப்பது, செமி கண்டக்டர் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பது, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பது ஆகிய பணிகள் நடைபெறும். மேலும் செமி- கண்டக்டர் துறைக்கான திறமைமிக்க பணியாளர்களை உருவாக்கி, தமிழகத்திற்கும், இந்திய, தேசிய அளவிலான அளவில் செயல்பட வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை சூலூர் 110 ஏக்கர் செமி கண்டக்டர் தொழில் பூங்காவில் பொது சேவை மையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. பொது சேவை மையம் ஆய்வகம், வடிவமைப்பு மையம், பயிற்சி மற்றும் திறன் மையம் உள்ளடக்கியதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.