கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை வழங்காமல் பாஜக அரசு பாகுபாடு காட்டுகிறது: தங்கம் தென்னரசு கண்டனம்
கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை வழங்காமல் பாஜக அரசு பாகுபாடு காட்டுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தகுதியான நகரங்கள் கொண்ட பட்டியலை கடந்த 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 19 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்திருந்தது. புனே, கொச்சி, கோவை ஆகியவை இடம்பெற்றிருந்தன. கொச்சி மற்றும் புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கோவைக்கு மட்டும் கடந்த 14 வருடங்களாக மெட்ரோ ரயில் திட்டம் கானல் நீராகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த கடந்த 2017 ஆம் ஆண்டு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். 2021 தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ.6,683 கோடி மதிப்பில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்த நிதி ஒதுக்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக ஒப்புதல் வழங்காமல் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசு மெட்ரோ திட்டப்பணிக்கு ஒப்புதல் வழங்காததை அடுத்து முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்தார். இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில், மதுரையும், கோவையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரங்கள். இவை இரண்டும் இந்தியாவின் வேகமாக வளரும் Tier-II நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல;
அவசியமான உள்கட்டமைப்புத் தேவை. மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது. ஒன்றிய பாஜக அரசின் பாகுபாட்டை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் நியாயமான உரிமைக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.