கோவையில் தேர்தல் பிரசாரமா? ஆள் சேர்ப்பு கூட்டமா? எடப்பாடி வந்திருக்காரு.. யாராச்சும் வந்து பேசுங்க: கூவி கூவி அழைத்த நிர்வாகிகள்: பரிதாப நிலையில் அதிமுக
அப்போது அவர், வழக்கம்போல் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்து பேச முயன்றார். ஆனால், அவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனை பார்த்த அதிமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார்.... வாங்க... வாங்க... அவரிடம் ஏதாவது பேசுங்க... என கூவிக்கூவி அழைத்தனர். அப்போதும், யாரும் வரவில்லை. இதனால், உடன் சென்ற அதிமுக நிர்வாகிகளும் நொந்து போயினர்.
மேலும், எடப்பாடியை சுற்றி கேமராக்கள் இருந்ததால் ஏதோ குறும்படம் சூட்டிங் நடக்கிறது... என நினைத்துக்கொண்டு அப்பகுதியினர் நமக்கென்ன வேலை என்பதுபோல் சென்றனர். அந்த பகுதில் உள்ள டீ கடைக்கு எடப்பாடி பழனிசாமி சென்று டீ குடித்தார். அங்கும் கூட்டம் இலலை. எடப்பாடியுடன், மக்களை பேச வைப்பதற்காக, அதிமுக நிர்வாகிகள் போட்ட திட்டம் எல்லாம் புஷ்வாணமானது. நிலைமையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, அவராகவே நடைபாதையில் இருந்த எலுமிச்சை பழ வியாபாரியிடம் பேசிவிட்டு ஓட்டலுக்கு நடையை கட்டினார்.
நேற்று மாலை வடவள்ளி பஸ் ஸ்டாப் பகுதியில் பிரசார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இந்த தொகுதியில் கூட்டணிக்கு ஓட்டு போடுங்க என்று பேசினார். இதனால் அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். வெங்கிட்டாபுரத்திலிருந்து சாயிபாபா கோயில் வரை 2 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ நடந்தது. துவங்கியதும் 100 மீட்டர் தூரம் நடந்த எடப்பாடி பின்னர் பிரசார வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். டிடிவி.தினகரன் பெயரை ஒரு இடத்திலும் கூறாமல் அவர் தவிர்த்தார். லாலி ரோட்டில் எடப்பாடி பேசி கொண்டிருந்த போது அந்த வழியாக கோவையிலிருந்து ஆனைகட்டி நோக்கி சென்ற அரசு பஸ்சின் கதவு கண்ணாடி உடைக்கப்பட்டது.
* குடம், தட்டு விநியோகம்
சாயிபாபா காலனி பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோவின் போது பெண்களுக்கு இலவசமாக சிறிய சில்வர் குடம், தட்டு கொடுத்தனர். இப்போ இது தர்றோம், அடுத்த எலக்சன்ல நமக்கு ஒட்டு போடுங்க என கட்சி நிர்வாகிகள் அன்பாக கேட்டு கொண்டனர். வேனில் வைத்து குடத்தை தந்த போது பெண்கள் கூட்டம் குவிந்தது. 300 பேருக்கு மட்டும் குடம் தந்த நிர்வாகிகள் அங்கேயிருந்து சென்று விட்டனர். குடம் கிடைக்காத பெண்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
* எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த முக்கிய தொழில் அமைப்புகள்
கோவையை சேர்ந்த தொழில்முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தான் தங்கியிருந்த ஓட்டலில் நடத்தினார். இதில், அங்கீகாரமற்ற பல்வேறு தொழில்அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக ஆதரவு தொழில்அமைப்பினர் மட்டுமே கலந்து கொண்டனர். கோவையில் உள்ள முக்கிய தொழில் அமைப்புகளான கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, சீமா, காட்மா, கோப்மா, பவுண்டரி அசோசியேஷன், தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் அமைப்பினர் கலந்து கொள்ளவில்லை. இது எடப்பாடி பழனிசாமியை அதிருப்தியடைய செய்தது.