வரத்து அதிகரிப்பால் சேலத்தில் தேங்காய் விலை சரிந்தது: கிலோவிற்கு ரூ.10 வரை குறைவு
சேலம்: வரத்து அதிகரிப்பால் சேலத்தில் தேங்காய் விலை சரிந்து, கிலோவிற்கு ரூ.10 வரை விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விளைச்சல் குறைந்து, மார்க்கெட்டுகளுக்கு அதன் வரத்து சரிந்தது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை அதிகரித்தது. குறிப்பாக சில்லரை விற்பனையில் ஒரு காய் ரூ.60 வரை சென்றதால், பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். சேலத்தை பொறுத்தவரை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஆற்றோர வீதி, முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோயில், பட்டை கோயில், மணல் மார்க்கெட், பால் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தேங்காய் வியாபாரம் செய்யப்படுகிறது. இதனிடையே, கடந்த இரு தினங்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு வரும் தேங்காயின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரத்தை விட விலை சற்று சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூரில் பகுதியில் இருந்தும், தர்மபுரி, ஈரோடு, காங்கேயம், பொள்ளாச்சி ஆகிய வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் தேங்காய் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தேங்காய் விளைச்சால் பாதித்து வரத்து பெருமளவில் சரிந்ததால், விலை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வந்தது. சேலத்தை பொறுத்தவரை கடந்த வாரம் ஆடித்திருவிழா நடந்தது. இதனால், அனைத்து பகுதிகளிலும் தேங்காய் வியாபாரம் களைகட்டியிருந்தது. தற்போது பண்டிகைகள் முடிந்ததால் வியாபாரம் சரிந்துள்ளது. அதேசமயம், கடந்த இருதினங்களாக பொள்ளாச்சியிலிருந்து வரும் தேங்காயின் வரத்தும் அதிகரித்துள்ளது.
இதனால் மொத்த விலையில் ஒரு டன் ரூ.70 ஆயிரமாக இருந்த விலை, தற்போது ரூ.58 முதல் 60 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதேபோல் சில்லறை விற்பனையை பொறுத்தவரை ஒரு கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் சரிந்தால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.