உச்சத்தில் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.256க்கு ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி
பழநி: பழநியில் கொப்பரை தேங்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று கிலோ ரூ.256க்கு ஏலம் போனது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, மானூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்களை, விவசாயிகள் பழநியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கொப்பரை ஏல மையத்திற்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். இதன்படி, நேற்று ஏராளமான விவசாயிகள் 10.50 டன் கொப்பரை தேங்காய்களை ஏலம் விடுவதற்கு கொண்டு வந்தனர்.
திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, பழநி சரக துணைப்பதிவாளர் செந்தில்வேல் பாண்டியன் ஆகியோர் கொப்பரை தேங்காய்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து நடந்த ஏலத்தில் 1 கிலோ கொப்பரை தேங்காய் ரூ.256.10க்கு ஏலம் போனது. ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.120க்கு ஏலம் போன கொப்பரை தேங்காய் தற்போது ரூ.256.10க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே கொப்பரை தேங்காய் விலை உச்சத்தில் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு விலை குறைவாகவும், பணம் தாமதமாகவும் கிடைக்கும். கொப்பரை ஏல மையத்தில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைப்பதுடன், உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது’’ என்றனர்.