கொச்சி விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கஞ்சா பறிமுதல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வியட்நாமில் இருந்து கடத்திய ரூ. 6.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து, வியட்நாம், ஆப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கொக்கைன், உயர்ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்காக சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் போதைப் பொருள் கடத்தல் குறையவில்லை. இந்தநிலையில் இன்று அதிகாலை பாங்காக்கில் இருந்து கொச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பேக்கை பரிசோதித்தனர்.
இதில் அந்த பேக்கில் சிறிய சிறிய பாக்கெட்டுகளாக ஆறரை கிலோ உயர்ரக கலப்பின கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்தப் பயணி உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த அப்துல் சமது என்றும், வியட்நாமிலிலிருந்து பாங்காக் வழியாக அதை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 6.5 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.