நாகை இறால் உற்பத்தியாளர்கள் தலையில் இடியை இறக்கும் அமெரிக்கா: 500டன் இறால் இந்தியாவுக்கு திரும்பி வந்ததால் கலக்கம்
நாகை: இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்க விதித்துள்ள 50% வரியால் நாகை மாவட்டத்தில் இறால் உற்பத்தி தேக்கம் அடைந்திருக்கிறது. அண்மையில் அனுப்பப்பட்ட 500 டன் இறால் அமெரிக்கவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது இறால் உற்பத்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் இன்னும் 40 நாட்களில் இறால் சேகரிப்பு தொடங்கவுள்ள சூழலில், அமெரிக்கவின் வரி விதிப்பால் இறால் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு எதிர்நோக்கியுள்ளனார். தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியில் நாகை மாவட்டம் முதல் இடத்தில உள்ளது. அத்துடன் பெரிய இறால்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் நாகப்பட்டினம் உள்ளது.
இறால்களை கொள்முதல் செய்யும் நான்கு நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைப்பதால் போதிய விலை கிடைப்பதில்லை என்பது உற்பத்தியாளர்களின் நீண்டகால புகார் ஆகும். கொச்சியில் இயங்கும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இறால் உற்பத்தியாளர்களுக்கு உதவாமல் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் கட்டணம் மற்றும் இடு பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இறால் உற்பத்தியாளர்களுக்கு, அமெரிக்கவின் 50% வரிவிதிப்பு பேரிடியாக விழுந்துள்ளது. அமெரிக்காவை காரணம் காட்டியே ஏற்றுமதியாளர்கள் விலை வீழ்ச்சி ஏற்படுத்துவார்கள் என்ற கவலையும், உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.