கோட்டி
கோட்டி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஊனுண்ணும் ஒரு விலங்கு. இது பல மணி நேரம் இரை தேடிச் செல்வதிலேயே செலவிடும். புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், ஏன் பறவைகளின் முட்டைகள் என பல வகையான உணவு வகைகளை இவை உண்ணும். இந்த கோட்டிகள், இரவில் நடமாடும் ஊனுண்ணியான ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், இதன் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும் வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.
இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால் அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது. இது ஒரு வெப்பமண்டலப் பாலூட்டி. பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட அர்ஜெண்டீனா வரையுள்ள பகுதி களில் காணப்படுகிறது. பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும். ஆண் கோட்டிகளோ தனிமை விரும்பிகள். இனப்பெருக்க காலத்தின்போது ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்து கொள்ளும். சினைக் கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு மரங்களில் கூடு கட்டக் கிளம்பிவிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு குட்டிகள் பிறக்கும். குட்டிகள் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக் கொண்டு பழைய கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டிக் கோட்டிகள் பார்ப்பதற்கு பந்து உருண்டு வருவது போல் காட்சியளிக்கும். சோளக்காடுகளும் கோழிப்பண்ணைகளும் இவற்றினால் அழிக்கப்படும். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்து சுலபமாக ஏமாற்றிவிடும்.