கடலோரங்களில் உள்ள அலையாத்தி காடுகள் வெறும் மரங்கள் அல்ல, நமது காலநிலையின் உயிர்நாடி: இயற்கையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை: தமிழ்நாடு அரசு முதல் அலையாத்தி காடுகள் மாநாட்டினை நேற்று மகாபலிபுரத்தில் நடத்தியது. வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், ‘தமிழ்நாட்டின் அலையாத்தி பயணம்’ எனும் விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட தலைவர் பாலகிருஷ்ண பிசுபதி, சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, ரமேஷ் ராமச்சந்திரன், கோ.சுந்தர்ராஜன் மற்றும் ஆ.கலையரசன் உள்ளிட்ட தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை மாநாட்டில் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகளுக்கும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கும் இடையே உள்ள ஒத்துழைப்புகளின் நீட்டிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும்போது, “அலையாத்தி காடுகள் என்பது கடலோரங்களில் உள்ள வெறும் மரங்கள் அல்ல. அவை, நம் கடற்கரைகள், சமூகங்கள் மற்றும் நமது காலநிலையின் உயிர்நாடி. தமிழ்நாடு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் மாநிலங்கள், விஞ்ஞானிகள் மற்றும் குடிமக்களை ஒன்றிணைக்கக்கூடிய உத்வேகத்தை உருவாக்க அரசு முயல்கிறது’’ என்று தெரிவித்தார்.