ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்களுக்கு காசோலைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.10.2025) முகாம் அலுவலகத்தில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோரை பாராட்டி, ஊக்கத்தொகையாக தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தமிழ்நாடு முதலமைச்சர் , தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இன்றையதினம் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் ரிப்பா நகரில் அமைந்துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் 19.10.2025 முதல் 23.10.2025 வரை நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமானது.
சுற்றுப்போட்டித் தொடராக (Round Robin) நடைபெற்ற இந்தப் போட்டிகளில் ஏழு நாடுகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு முன்பு ஏழு அணிகள் ரவுண்ட் ராபின் வடிவத்தில் போட்டியிட்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இரண்டிலும் அசத்தலான ஆட்டங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு திறமையான கபடி வீரர்கள் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்த செல்வி கார்த்திகா ரமேஷ் (பெண்கள் பிரிவு) ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமான முக்கிய வீரர்களாகத் திகழ்ந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அபினேஷ் மோகன்தாஸ் என்பவர் 2019 முதல் 2025 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேனியில் உள்ள விளையாட்டு விடுதியில் முறையான பயிற்சி பெற்று தனது திறனில் முன்னேற்றம் கண்டுள்ளார். சென்னை, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் செல்வி கார்த்திகா ரமேஷ் என்பவர் தேசிய அளவிலான SGFI, Khelo India மற்றும் Federation Nationals உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டிற்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்ற சிறப்புடைய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.
மேலும், அவர் 5 முறை தமிழ்நாடு அணியின் அணித்தலைவராக (Captain) பொறுப்பேற்று அணியை வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய விளையாட்டு திறமைக்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உயரிய ஊக்கத் திட்டமான High Cash Incentive (HCl) திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளார். இளையோர் பெண்கள் இந்திய கபடி அணியின் துணை அணித்தலைவராக (Vice Captain) பணியாற்றி, இந்திய அணியை வெற்றிப் சிறப்பான தலைமைத்திறனை பாதைக்கு வழிநடத்தும் வெளிப்படுத்தியுள்ளார். ஆசிய அரங்கில் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் , தலா ரூ.25,00,000 (இருபத்தைந்து இலட்சம்) என மொத்தம் ரூ.50,00,000 (ஐம்பது இலட்சம்) ஊக்கத் தொகை வழங்கினார். முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, ரூ.15,00,000 உயரிய ஊக்கத்தொகை (HCl) மற்றும் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் கபடி சாதனையை கௌரவிக்கும் வகையில் நட்சத்திரங்களின் சிறந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து கூடுதலாக ரூ.10,00,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் சாதனை தமிழ்நாடு ஒரு முன்னணி விளையாட்டு மாநிலமாக உருவெடுத்து வருவதற்கான உறுதியான சான்றாகும். விளையாட்டாளரை மையப்படுத்திய திட்டங்கள், அறிவியல் சார்ந்த பயிற்சி முறைகள் மற்றும் மேம்பட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய அளவிலான சாம்பியன்களை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிகழ்வின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள் திரு.மா.ராஜேஷ், திரு.மா.நாகராஜன் மற்றும் கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோரது பெற்றோர்கள் உடனிருந்தனர்.