திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்களும் மனம் விட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்களை கவனமுடன் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு பல்வேறு விளக்கங்களையும் அளித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மணி நேரம் என, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டார். சட்டப்பேரவை தொகுதி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை பட்டியலை கையில் வைத்து கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார். சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டினார்.
மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்கினார். இது திமுக நிர்வாகிகளை மேலும் உற்சாகப்படுத்தியது. மேலும் கட்சி பணியில் சுணக்கம் காட்டுபவர்கள், மெத்தன போக்குடன் செயல்படுவர்களை கண்டிப்பு முகம் காட்டினார். கட்சி பணிகளில் சுணக்கம் காட்டினால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். ஒற்றுமையுடன் பணியாற்றி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.