சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடி செலவில் மதுரை மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சட்டத்துறை சார்பில் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் ரூ.48 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடங்கள் மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் ரூ.6 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நீதித்துறையின் மேம்பாட்டிற்காக இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து, நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, புதிதாக பல்வேறு இடங்களில் நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுதல், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு புதிய கூடுதல் கட்டடங்கள் கட்டுதல், நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குதல், தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்திலிருந்து உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவியை ரூ.10 லட்சம் உயர்த்தியது, உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடம் மதுரை மாவட்டம், தல்லாகுளம், தங்கராஜ் சாலையில் 1,35,088 சதுர அடி பரப்பளவில் ரூ.48 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மதுரை அரசு சட்ட கல்லூரிக்கான புதிய கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இப்புதிய கட்டடம் 25 வகுப்பறைகள், கருத்தரங்கு மண்டபம், காணொளி காட்சி அறை, சொற்பொழிவு அறை, உள்விளையாட்டு அரங்கம், மாணவ, மாணவியருக்கு தனித்தனி ஓய்வு அறைகள், மாதிரி நீதிமன்ற அரங்கம் மற்றும் நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம் ஆகிய பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு புதிய நூலகம் கட்டப்படும் என்று மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்தி நகரில் 20,000 சதுர பரப்பளவில் ரூ.6 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரம் செலவில் வேலூர் அரசு சட்டக் கல்லூரிக்கு தரை மற்றும் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார். இக்கட்டடம் மாணவர்களுக்கான குறிப்புதவி பிரிவு, புத்தகங்கள் வழங்கும் பிரிவு, அதிவேக இணையதள வசதியுடன் கூடிய மின் மண்டலம், கருத்தரங்கு கூடம் மற்றும் நூலகர் அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டத்துறைச் செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக் கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.