ஆழியார் அணை அருகே வால்பாறை மலையில் மேகமூட்டம் போல படர்ந்த பனி: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின் கோடை மழையும், அதற்கு பிறகு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இருக்கும். இதில், வடகிழக்கு பருவ மழையின்போது கார்த்திகை மற்றும் மார்க்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பாண்டில், கார்த்திகை மாதத்திற்கு முன்பாகவே, பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது.
அதிலும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியான ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் கடந்த வாரத்திலிருந்து பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளது. மாலை நேரத்தில் துவங்கும் பனிப்பொழிவானது மறுநாள் மதியம் வரையிலும் நீடிக்கிறது. இதில் நேற்று பகல் முழுவதும் ஆழியார் அணையை சுற்றிலும் மேக மூட்டம்போல் பனி படர்ந்திருந்ததால் வால்பாறை மலை மறைந்தவாறு இருந்தது. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரம்மிப்புடன் பார்த்து ரசித்து சென்றனர்.