ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு; 11 பேர் பலி
ரம்பன்: காஷ்மீரில் மீண்டும் நேற்று மேகவெடிப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரில் கடந்த பல நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டி வருகிறது. மேலும் மழையுடன் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்பன் மாவட்டத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு சகோதரர்கள் உட்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் தன்னார்வலர்கள், காவல்துறை, எஸ்டிஆர்எப் மற்றும் ராணுவத்தினர் அடங்கிய மீட்பு குழுவினர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான 5 பேரில் 4 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
இதனிடையே ரியாசி மாவட்டத்தில் உள்ள படேர் கிராமத்தில் கனமழை காரணமாக நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. நசீர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டு இருந்தபோது மலைச்சரிவில் இருந்த அவர்களின் வீடு நிலச்சரிவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் உயிருடன் புதைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புகுழுவினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இதில் நசீர் அகமது, அவரது மனைவி மற்றும் 5 மகன்கள் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேர் நேற்று பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
* ஆற்றின் ஓட்டத்தை தடுத்த நிலச்சரிவு
ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தின் குனிநல்லாவில் நேற்று முன்தினம் தொடர் கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் பாறை மற்றும் மண் குவியல் விழுந்ததில் பிச்சால்ரி ஆற்றன் ஓட்டம் தடைபட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள கரலானா கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.
* இமாச்சலில் 11 பேர் மாயம்
உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை மற்றும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காணாமல் போயினர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முழங்கால் அளவுக்கு குவிந்துள்ள இடிபாடுகள், வௌ்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ள குப்பைகளில் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.