உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்; 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்
உத்தராகண்ட்: உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் கரையோர கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஹரித்துவாரில் மேகவெடிப்பு காரணமாக 30 செ.மீ. மழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 25 தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டன.
திகிலூட்டும் வகையிலான மண்சரிவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கீர் கங்காவின் மறுபுறத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கீர் கங்கா ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் பலர் மண்ணில் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது. வெள்ளத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போன 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹர்சில் பகுதியில் உள்ள கீர் கங்கா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது; பலர் வெளியேற்றப்பட்டனர். சியானா சட்டி என்ற இடத்தில் சாலையில் நிலச்சரிவு -யமுனோத்திரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில்; மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்; நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அனைவரையும் காப்பாற்றும் முனைப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். இதனிடையே உத்தராகண்ட் வெள்ளம், நிலச்சரிவு குறித்து மாநில முதல்வருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். முதல்வர் புஷ்கர் சிங்குடன் தொலைபேசியில் பேசி பாதிப்புகள் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்.