வேர்களைத் தேடி திட்ட நிறைவு விழா
சென்னை: தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் நிறைவு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். சென்னை, பெரியார் திடலில் தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலாளர் சஜ்ஜன் சிங் ராசவான், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் வள்ளலார், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் துபாய் மீரான், பைசல், புகழ் காந்தி, ராஜரத்தினம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.