ரூ.10,000 நோட்டு மாதிரி, கடிகாரம் உள்பட குடியரசு தலைவர்களால் பெறப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்
புதுடெல்லி: குடியரசு தலைவர்களால் பெறப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசு பொருட்களை குடியரசு தலைவர் மாளிகை ஏலத்துக்கு விடுகிறது. குடியரசு தலைவர் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்ட பரிசு பொருட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசு பொருட்களை குடியரசு தலைவர் மாளிகை இ-உபஹர் என்ற இணையதளம் வாயிலாக ஏலம் விட்டு வருகிறது.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி தன் பதவியின் இரண்டாண்டு நிறைவையொட்டி இ-உபஹர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஏலம் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக ரூ.10,000 நோட்டு மாதிரி, இரட்டைப்பக்க வின்டேஜ் கடிகாரம், ஒரு பாரம்பரிய மிசோ கருவிப்பெட்டி, ஒரு தேசிய சின்ன நினைவுப்பரிசு மற்றும் ஒற்றுமை சிலையின் மாதிரி உள்பட 250க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற காரணங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட திட்டங்களுக்கு செலவிடப்படும்” என தெரிவித்தார்.