நீலகிரியில் மழை குறைந்ததால் காலநிலை மாற்றம்
ஊட்டி: காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்ததால் நீலகிரியில் மழை குறைந்து வெயிலான காலநிலை நிலவியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ேம மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பெய்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பின. வனப்பகுதிகளிலும் பசுமை திரும்பியது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள் நிரம்பின. வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வந்தது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை முதலே காற்றுடன் மழை பெய்தது. மழையின் தாக்கம் அதிகமாக இல்லாத போதும், தொடர்ச்சியாக பெய்தது.
குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை கரையை கடந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்தது. அதே சமயம் அதிகாலை வேளையில் பலத்த காற்று வீசிய நிலையில் ஊட்டி அருகே தீட்டுக்கல் பகுதியில் இருந்து மேல்கௌஹட்டி கிராமத்திற்கு செல்ல கூடிய சாலையின் குறுக்கே ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் அப்பகுதிக்கு போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலையத்தினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.
எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் காற்று காரணமாக மின் தடை ஏற்பட்டது. தொடர்ந்து மழை முற்றிலுமாக குறைந்த நிலையில், ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் வெயிலுடன் இதமான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில சமயங்களில் காற்று வீசியது. அதே சமயம் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பொழிவு இருந்தது.