தூய்மை பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரம் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம்: ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள்
சென்னை: தூய்மை பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரம் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூய்மை தொழிலாளர்களின் போராட்டத்தில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை போராட்டத்தில் பங்கேற்ற சிலர் வலியுறுத்திள்ளனர். அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருபோதும் குலத்தொழிலை வலியுறுத்த மாட்டார்கள்.
தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர் பறையர் மற்றும் அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும், பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல இந்த தலைமுறையே இந்த இழிதொழிலில் இருந்தும் குலத்தொழிலில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
குறிப்பாக அருந்ததியர் சமூகம் முன்னேற்றத்திற்காக கலைஞர் வழங்கிய அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் காரணமாக தூய்மை தொழிலாளர்களின் குடும்பத்திலிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விமான பணிப்பெண்கள், தொழில் முனைவோர்கள் என்று பலர் உயர்ந்துள்ளனர். பல குடும்பங்கள் அந்த குலத்தொழில் இருந்து விடுபட்டு மாற்றுப்பணிகளில் ஈடுபட்டு முன்னேறி உள்ளனர்.
அதற்கு அடித்தளம் அமைத்தது திராவிட மாடல் அரசு, கல்வி பொருளாதார முன்னேற்றம் தான் இச்சமுகத்தையும் இந்த தொழிலாளர்களையும் மேம்படுத்தும். எனவே தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள அருந்ததியர், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது அதை வரவேற்கிறோம். மனித மாண்போடும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழில் இருந்து வெளியேறுவது சரியானதாகும். அதை நோக்கி சிந்திப்போம், செயல்படுவோம். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.