தூய்மை சேவை
தூய்மை பணியாளர்களுக்கு திராவிட மாடல் ஆட்சிக்காலம் பொற்காலம் எனலாம். ஊர் அடங்கிய பின்னும் ஓய்வில்லாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் கணக்கில் அடங்காதது. தூய்மை பணியாளர்களுக்கு தற்போது சென்னையில் 3 வேளையும் உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு திமுக ஆட்சியை போல வேறு எந்த ஆட்சியும் திட்டங்களை வாரி வழங்கியதில்லை.
அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், உயிரிழந்த தூய்மை பணியாளர்களுக்கு நிதியுதவி, பணியின்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை, தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் தொழில் தொடங்க தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி தொகை திட்டத்தின் கீழ் கல்வி கட்டண நிதியுதவிகள், தாட்கோ நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் என மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள் தேவைக்கேற்ப வழங்குதல் மட்டுமின்றி, இப்ேபாது சென்னை போன்ற பெருநகரங்களில் வார்டுகள் தோறும் அவர்களுக்கு உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதிகளுடன் ஓய்வறைகள் வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு மத்தியில் தூய்மை சேவைகளை அவர்கள் ஆற்றும்போது பசி ஒரு பிரச்னையாக இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்போது 3 வேளை உணவு திட்டமும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி தூய்மை பணியாளர்களுக்கு உணவு இடைவேளையில், சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்பட உள்ளது. இந்த உணவு சூடு குறையாமல் இருக்க வெப்ப காப்பு பையில் வைத்து தூய்மை பணியாளர்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு வழங்கப்படும். பணியின் தன்மைக்கேற்ப 3 வேளை உணவு வழங்கிடும் அரசின் திட்டத்தை தூய்மை பணியாளர்களும் வரவேற்றுள்ளனர். தூய்மை பணியாளர்களின் பணி என்பது வெறும் தெருக்களை சுத்தம் செய்தல் என்பதோடு முடிவதில்லை.
பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க வேண்டும். கழிவுநீரோடைகளுக்குள் அவர்கள் சில இடங்களில் உயிரை பணயம் வைத்து இறங்குகின்றனர். தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வாங்க வீதிகள் தோறும் செல்லும்போது தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளின் தொல்லைகளையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர். எனவே அவர்களது சிரமங்களை உணர்ந்தே அரசு இத்தகைய புதிய திட்டங்களை அவர்களுக்கு அள்ளி கொடுக்க முன்வந்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்களும் எப்போதும் உதவிகரமாக இருக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களிலும் கொட்டுவதோடு, அவசரத்திற்கு கழிவு நீரோடையில் கொட்டி செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். இலவச பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும்போது, பொறுப்பற்ற முறையில் தண்ணீர் ஊற்றாமல் செல்ல கூடாது. கண்ட இடங்களில் துப்புவதும், இயற்கை உபாதைகளை கழிப்பதும் சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு, தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும். நகரங்களை கண்ணும் கருத்துமாக காப்பவர்களுக்கு நாமும் கை கொடுப்போம்.