சிட்டி யூனியன் வங்கி 120வது நிறுவன நாள் நிகழ்ச்சி; நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறை முக்கிய பங்காற்றுகிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித் துறை முக்கியப் பங்காற்றுகிறது என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். சென்னையில் நேற்று சிட்டி யூனியன் வங்கியின் 120வது நிறுவன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலகில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இந்த வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாறிவரும் பொருளாதார சூழலில், மக்களின் விருப்பங்கள் பெருமளவில் விரிவடைந்துள்ளது, நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால் வங்கிகளின் பங்களிப்பு விரிவடைந்துள்ளது. வங்கிகள் செல்வத்தின் பாதுகாவலர்கள் மட்டுமின்றி, தற்போது அவை பல்வேறு நிதி சேவைகளை வழங்குகின்றன. அவை உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கும் கருவியாக உள்ளது.
மேலும் நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கமாகும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் குறைந்த கட்டணத்தில் நிதி சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதாகும். நிதி உள்ளடக்கத் துறையில் சிட்டி யூனியன் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், விளிம்புநிலை சமூகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயனாளர்களுக்கு உகந்த மொபைல் செயலிகள், நுண் கடன்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. பேமண்ட் வங்கிகள், டிஜிட்டல் வேலட் மற்றும் வங்கி ஊழியர்கள் மூலம் நிதி சேவைகள் ஊரகப் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.