உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
டெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையின் புனிதமான தருணத்தில், அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளியாகும். நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்த்துப் போராடவும் கடவுள் ராமர் தைரியம் அளித்துள்ளார். இதற்கு ஒரு உதாரணத்தை அண்மையில் பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நீதியை நிலைநாட்டியது, அநீதிக்கு பழிவாங்கியது.
வரலாற்று சாதனைகளுக்கு இடையே, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் நாடு இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டன. இதனால் மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகிறார்கள். பல நெருக்கடிகளை சந்திக்கும் உலகில், இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி ‘சுதேசி’ என்று நாம் பெருமையுடன் கூறுவோம். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஊக்குவிப்போம்,” என்றார்.