பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாததால் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
*விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. சில இடங்களில் பாதாள சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்து வீதிகளில் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலும் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர்.
இதனிடையே விழுப்புரம் நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட திரு.வி.க., வீதி அருகே உள்ள வாணியர் தெரு, தனலட்சுமி நகர், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்து தெருக்களிலும், குடியிருப்பு பகுதியிலும் தேங்கி பாதித்து வருகிறது. இது குறித்து கவுன்சிலர் நகராட்சி அதிகாரிகளும் பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலர் பத்மாவதி தலைமையில் தக்கா தெரு சந்திப்பில், பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்வதற்கு வந்த நகராட்சி கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு வாகனம் மட்டுமே நகராட்சியில் உள்ளதால், உடனே வந்து அடைப்பை சரிசெய்ய முடியவில்லை என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நகர காவல் நிலைய போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் 8வது வார்டில், கடந்த 4 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யவில்லை. சாலை சீரமைப்பு, பாதாள சாக்கடை சுத்தம் செய்தல், குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எந்த பணிகளும் சரியாக நடக்கவில்லை. இது குறித்து, நகர மன்ற கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் நகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.