சினிமாவை பார்த்து மாணவர்கள் ரவுடிகளாக மாறுகின்றனர்: கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் வேதனை
இந்நிலையில் கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியது: சமீப காலமாக கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருளை பயன்படுத்துவதால் தான் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். எனவே போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: சமீப காலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப் பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக ஒரு போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்களது குழந்தைகளை கவனிக்க பெற்றோரும் மறந்து விடுகின்றனர். கேரளாவில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அரசு வந்த பின்னர் 87,702 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.