சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி நடிகைக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் கைது
பெங்களூரு: பெங்களூரு நாகர்பாவி அருகே உள்ள அன்னபூர்ணேஸ்வரி நகரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் (33). டிவி சீரியல் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ஒரு நடிகையிடம், கடந்த 2022ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில், ஹேமந்த் குமார் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அந்த நடிகை போலீசில் அளித்த புகாரில், 2022ம் ஆண்டு என்னிடம் தன்னை ஒரு திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திக்கொண்ட ஹேமந்த் குமார், ரிச்சி என்ற திரைப்படத்தை தயாரிப்பதாகவும், அதில் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அதற்காக ரூ.2 லட்சம் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனக்கு ரூ.60,000 அட்வான்ஸ் வழங்கப்பட்டது.
அதன்படி, படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால் ஏதோ காரணத்தால் படப்பிடிப்பை ஒத்திவைத்தார். கவர்ச்சியான உடைகளை அணியுமாறும், ஆபாசமாக நடிக்குமாறு வற்புறுத்தினார். மேலும், தகாத முறையில் தவறான எண்ணத்துடன் என்னைத் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர், பட புரமோஷன் என்று கூறி மும்பைக்கு என்னை வரவழைத்து, அங்கும் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
மேலும், ரிச்சி படத்தின் சில தணிக்கை செய்யப்படாத காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். நான் பட புரமோஷனுக்கு மறுத்ததால், என்னையும் என் அம்மாவையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார் என்று நடிகை போலீசில் புகார் அளித்தார். நடிகை அளித்த புகாரின் பேரில் பெங்களூரு ராஜாஜிநகர் போலீசார், ஹேமந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.