விழுப்புரத்தில் சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம் பைனான்சியரை காரில் கடத்தி சென்ற மதுரை கும்பல்
*கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் அடாவடி
விழுப்புரம் : விழுப்புரத்தில் கொடுக்கல், வாங்கல் தகராறில் பைனான்சியரை காரில் கடத்தி சென்ற மதுரை கும்பலை போலீசார் ஜீப்பில் துரத்தி சென்ற சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்தவர் சிவா(40).
பைனான்சியர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. மாமனார் வீட்டிலேயே தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்றனர். தொடர்ந்து சிவா சொந்த ஊருக்கு வந்து 2வது திருமணம் செய்து கொண்டு மீண்டும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.
மதுரையில் பைனான்ஸ் தொழில் செய்யும்போது அங்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அங்குள்ளவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் சொந்த ஊருக்கு வந்துவிட்டாராம். இந்த பணத்தைக் கேட்டு மதுரை கும்பல் சிவாவை டார்ச்சர் செய்து வந்துள்ளது. பணம் கொடுக்காததால் மதுரையில் இருந்து 2 கார்களில் 8 பேர் கொண்ட கும்பல் நேற்று காலை சிவா வீட்டிற்கு சென்றுள்ளது.
வீட்டில் இருந்த சிவாவை கத்தி முனையில் கடத்தி, அவருக்கு சொந்தமான சொகுசு காரில் மதுரைக்கு கடத்தி சென்றனர். சிவாவின் பெற்றோர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். எஸ்பி சரவணன் உத்தரவின்பேரில் சிவாவை கடத்திச் செல்லும் கும்பலை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கடத்தல் கும்பல் விழுப்புரம் புறவழிச் சாலை அருகே சென்றது. முத்தாம்பாளையம் பகுதியில் போலீசார் இருப்பதை கண்டதும் விழுப்புரம் நகருக்குள் காரை விட்டுள்ளனர்.
சிக்னல் பகுதியில் போலீசார் இருப்பதை பார்த்த கும்பல் யூட்டர்ன் போட்டு ராங் ரோட்டில் தாறுமாறாக சென்றன. அப்போது சாலையில் எதிரே வந்த 5 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதிவிட்டு மீண்டும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றனர். அந்த காட்சி சினிமா படத்தை மிஞ்சும் வகையில் பரபரப்பாக பார்க்கப்பட்டன.
தொடர்ந்து போலீசார் துரத்தி செல்வதை கண்ட கடத்தல் கும்பல் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் பைனான்சியர் சிவாவையும், அவரது சொகுசு காரையும் விட்டுவிட்டு அவர்கள் வந்த 2 கார்களில் மதுரை நோக்கி சென்றனர். இருப்பினும் போலீசார் அந்த கும்பலை பிடிக்க மாவட்ட எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது. கடத்தல் கும்பலிடம் மீட்கப்பட்ட சிவா செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வளத்தி காவல் நிலைய போலீசார் கடத்தல் கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க எஸ்பி சரவணன் உத்தரவின்பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் சேஸிங் வீடியோ வைரல்
விழுப்புரம் சிக்னல் பகுதியில் கடத்தல் கும்பல் பைனான்சியர் சிவாவை கடத்திக்கொண்டு ராங் ரூட்டில் தாறுமாறாக சென்றது. அவரை பின் தொடர்ந்து போலீசாரும் ஜூப்பில் துரத்தி சென்றனர். இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் சினிமா சூட்டிங் நடப்பதைபோல் ரசித்துக் கொண்டிருந்தனர். பின்னர்தான் சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதியதால் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் சாலையில் திரண்டனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. கடத்தல் கும்பல் காரில் பறந்து செல்வதும், பின்னால் போலீசார் ஜீப்பில் துரத்திச் செல்வதுமான காட்சிகள் சிசிடிவி கேமராவில் இருந்து பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன.